Vellore Diocese

 

 

Details Descriptions
22nd April, 2023
3rd week, Saturday
Year A, Pasca(Easter) Season
இறைவன் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களை தான் வாக்களித்த நாட்டிற்கு வழிநடத்தினார் என்பதை, மீட்பின் வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இந்த மீட்பின் வரலாற்றில் பல இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அவர்களைக் கட்டுக்கோப்பாக வன்முறையில்லாமல், பாதுகாப்பாக வழிநடத்த வேண்டுமென்றால், இறைவனின் துணையும், அவர் கொடுத்திருந்த வழிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. இத்தகைய எண்ணத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் அமைந்ததுதான், இந்த திருப்பாடல். கடவுளின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்துகிறார். கடவுளின் சட்டப்படி நாம் நடக்கிறபோது, நமது வாழ்க்கையில் நாம் இடறி விழமாட்டோம். கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், நமது வாழ்க்கையில், நாம் துணிவோடு நடப்பதற்கு, அது வழிசெய்யக்கூடியதாக இருக்கிறது. நம்மை அரவணைத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ப்பதற்கு உதவியாக இருந்தது கடவுளின் சட்டங்கள் தான். அதனை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நிச்சயம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். நமது வாழ்க்கையில் நாம் எப்போதும், கடவுள் காட்டுகிற வழியில் வாழ அழைக்கப்படுகிறோம். கடவுளின் வழியில் நாம் நடக்கிறபோது, நாம் தவறிச்சென்று விடாமல் இருக்க அவர் நமக்கு உதவி செய்வார். அவருடைய விழுமியங்களின்படி வாழ, நமக்கு உறுதுணையாக இருப்பார்.
Written By
Fr. Edward A
19th April, 2023
2nd Week, Wednesday
Year A, Pasca(Easter) Season
வாழ்க்கைப் பயணத்தில் நாம் சாதனை சிகரத்தை அடைய நமக்கு வேண்டிய மூலதனம் உழைப்பு. தன் 20 ஆண்டு கண்டுபிடிப்புகளை அவரது அன்பு நாய் நெருப்புக்கு இரையாக்கிய போது வருந்தவில்லை ஐசக் நியூட்டன். மேலும் உழைப்பை கொடுத்து மாற்றியமைக்கின்றார். வழக்கறிஞரான தி.வே.சுந்தரம் மதுரையில் போக்குவரத்து கழகம் துவங்கி டிவிஎஸ் என்ற குழுமத்தை உண்டாக்கியது அவரது உழைப்பு. செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனான ஆபிரகாம் லிங்கன் அமொிக்க அதிபரானது அவரது உழைப்பு. இவ்வாறு பல மனிதர்கள் இந்த சமுதாயத்திலே உழைப்பால் முன்வந்திருக்கின்றார்கள். இயேசுவின் உழைப்பு அனுபவம் சற்று வித்தியாசமான அனுபவத்தை கற்றுக்கொடுக்கின்றது. ஏனென்றால் இயேசுவை மக்கள் 3 நோக்கத்திற்காக தேடினார்கள். இவர் நம்முடைய வாழ்வில் அற்புதங்களை செய்வார், உணவு தருவார், உரோமை அரசை எதிர்த்து போராடுவார். இத்தகைய நோக்கத்திற்காக தான் மக்கள் இயேசுவை தேடினார்கள். வயிராற உண்ட மூன்றாவது நாளிலே மக்கள் இயேசுவை தேடி வருகின்றார்கள். அப்பொழுது தான் இயேசு அழியா உணவுக்காக உழையுங்கள் என்று கூறுகின்றார். அதாவது (அன்பு, இரக்கம், கருணை) இவைகள் தான் அழியா உணவாக இயேசு கற்றுக் கொடுக்கின்றார். இதனைத் தான் மறைமுகமாக உங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று தன் சீடர்களை பார்த்தும் மக்களைப் பார்த்தும் கூறுகின்றார். நாம் எத்தகைய உணவிற்காக உழைக்கின்றோம்? சமுதாய உணவிற்காகவா? அல்லது விண்ணக உணவிற்காகவா? சிந்திப்போம்.
Written By
Fr. Edward A